அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு.! வெறிச்சோடிய சென்னை மாநகரம்.! ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு.!
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு கடந்த 10-ந் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உத்தரவு பிறப்பித்தது.
இந்தநிலையில், தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும். இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பேருந்து போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சென்னையில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர கண்கானிப்பில் உள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்டுள்ள இரவுநேர ஊரடங்கை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு 10 மணி முதல் சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது.