யானை தாக்கி சோகம்.. தேயிலை தோட்டத்தில் ஒருவர் பரிதாப பலி..!
யானை தாக்கி சோகம்.. தேயிலை தோட்டத்தில் ஒருவர் பரிதாப பலி..!

யானை தாக்கியதில் இருளர் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கீழ்கோத்தகிரி அருகே கொப்பரை கிராமத்தில் வசித்து வருபவர் பெருமாள். இவர் தனது பணியை முடித்துவிட்டு தேயிலை தோட்டம் வழியாக வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
தற்போது பலாப்பழ சீசன் என்பதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டம், தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள நிலையில், வழக்கம்போல பெருமாள் பணிக்கு சென்றுவிட்டு தேயிலை தோட்டம் வழியாக வீடு திரும்பியுள்ளார்.
அப்போது காட்டு யானை அவரை பயங்கரமாக தாக்கியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே பெருமாள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரவு முழுவதும் பெருமாள் வீட்டிற்கு வராத நிலையில், அவரது மகன் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் அவரை பல இடங்களிலும் தேடியுள்ளனர். இருப்பினும் அவரை காணாததால் தேயிலை தோட்டத்திற்கு வந்து பார்த்தபோது, பெருமாள் அங்கு சடலமாக கிடந்தது தெரியவந்தது.
பின் இதுகுறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பெருமாளின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், "யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும், தேயிலை தோட்டம் வழியாக வருவதை தவிர்க்க வேண்டும்" எனவும் வனத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.