இராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 13 பேர் பலி.. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!
இராணுவ ஹெலிகாப்டர் விபத்து.. 13 பேர் பலி.. சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி.!
குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில், 13 பேர் பலியாகியுள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெல்லிங்ஸ்டன் இராணுவ பயிற்சிப்பள்ளிக்கு, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 9 இராணுவ உயர் அதிகாரிகள் இன்று செல்லவிருந்தனர். காலை 10.30 மணியளவில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்ற நிலையில், வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் திரும்பி அனுப்பப்பட்டுள்ளது.
வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில், இராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 5 மணியளவில் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், "குன்னூர் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. டி.என்.ஏ அடிப்படையில் உயிரிழந்தவர்களின் சடலம் அடையாளம் காணப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், "விபத்து எதிர்பாராத விதமாக நடந்துவிட்டது. இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தான் அறிவிக்கும். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும். மதியம் 12.27 மணியளவில் விபத்து நடந்துள்ளது. விமானப்படை சார்பாக விசாரணை நடத்தப்படும். மீப்பு பணிகளுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பை தந்துள்ளது" என்று தெரிவித்தார்.