3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் நிவர் புயல்.. இதற்கு என்ன கரணம்..? வானிலை ஆய்வு மையம் தகவல்..
நிவர் புயல் கடந்த மூன்று மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.
நிவர் புயல் கடந்த மூன்று மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் இருக்கும் நிலையில் அதற்கான காரணம் குறித்து விளக்கமளித்துள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்.
இதுகுறித்து அவர் கூறிய தகவலில், "நேற்றுவரை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்த நிவர் புயல் இன்று காலைதான் நிவர் புயலாக மாறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்தபோது நேற்று காலை மணிக்கு 25 கி.மீ வேகத்திலும், பிற்பகலில் 11 கி.மீ வேகத்திலும், அதன்பின்னர் 14 கி.மீ வேகத்திலும், இரவு நேரத்தில் 4 கி.மீ வேகத்திலும் நகர்ந்தது.
ஆனால் தற்போது புயல் நகராமல் ஒரு இடத்தில் உள்ளது. முதலில் கீழே இருந்த புயல் தற்போது நகர்ந்து மேலே வருவதாலும், இலங்கை பகுதியுடன் தொடர்பில் இருப்பதாலும், வேறொரு இடத்தில் தொடர்பில் உள்ளபோதும், புயலின் நிலையில் மாற்றம் நிகழும்போதும், அதன் நகர்வில் மாற்றம் இருக்கும். இது இயல்பான ஒன்றுதான் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புயல் ஒரே வேகத்தில் நகராது. அதன் வேகத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். முதலில் வேகமாக நகர்ந்த புயல் தற்போது நிலையாக உள்ளது. இதனை அடுத்து புயல் தீவிர புயலாக மாற உள்ளது. தீவிர புயலாக மாறியபிறகு மீண்டும் வேகமாக நகரக்கூடும்" என அவர் தெரிவித்துள்ளார்.