முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க அவசியமில்லை - தமிழக முதல்வர் பதில் கடிதம்
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க அவசியமில்லை - தமிழக முதல்வர் பதில் கடிதம்
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழையால், மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க தமிழக முதலமைச்சருக்கு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள தமிழக முதலமைச்சர், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், நீர்மட்டம் 142 அடிக்கு மிகாமல் தொடர்ந்து கண்காணிப்பதால் அணையின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் எழுதிய கடிதம்:
அணை பாதுகாப்பாக இருக்கிறது. எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. எனவே அணை நீர்மட்டத்தைக் குறைக்க தேவையில்லை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 142 அடி நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த அளவே தொடரும் என குறிப்பிட்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு முடிந்தவரை அதிக பட்ச தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும், நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவை கண்காணிக்க போதிய ஒத்துழைப்பை தமிழக அதிகாரிகளுக்கு கேரள அதிகாரிகள் வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் தொகையை கேரள மின்துறைக்கு செலுத்தியுள்ளதாகவும்அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.