டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய முதியவர்கள் கைது!
டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய முதியவர்கள் கைது!
சென்னை மெரினா காந்தி சிலை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய முதியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை மெரினா காந்தி சிலை அருகே நேற்று 15 க்கும் மேற்பட்ட முதியவர்கள் தேசியக்கொடி மற்றும் காந்தி புகைப்படத்துடன் அங்கு ஒன்று கூடினர்.
இதனையடுத்து அவர்கள் காந்தி நினைவு நாளில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூட வலியுறுத்தி திடீரென காந்தி சிலை அருகே உண்ணாவிர போராட்டம் நடத்த முயன்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அவர்களை உடனடியாக கைது செய்தனர்.
அதன் பின்னர் அவர்களை அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர். சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டம், பேரணி, உண்ணாவிரதம் போன்றவை நடத்த சென்னை மாநகர காவல் துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தடை உத்தரவை மீறி முதியவர்கள் காந்தி சிலை அருகே போராட்டம் நடத்த முயன்றதால் அவர்கள் மீது அத்துமீறி ஒன்று கூடியது, சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.