அதிமுக திமுகவிற்கு வந்த திடீர் சோதனை; தேர்தலில் களமிறங்கும் பவர்ஸ்டார்; எந்த தொகுதி தெரியுமா?
parliment election - south chennai - power star
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தற்சமயம் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று 2வது கட்டமாக தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகள் தங்களோடு ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து வியூகம் அமைத்து வருகின்றனர்.
தொடர்ந்து அனைத்து தரப்பினரும் ஆவலோடு எதிர்பார்த்த அதிமுக திமுக தேர்தல் அறிக்கையும் இன்று வெளிவந்தது. இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பவர் ஸ்டார் வேட்பாளராக களமிறங்க உள்ளார். மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சியின் சார்பில் சீனிவாசன் போட்டியிடுகிறார்.
தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கபாண்டியனின் மகளும் எழுத்தாளருமான தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிட உள்ளார். அதிமுக சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் களமிறங்க உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அதே தொகுதியில் பவர் ஸ்டார் போட்டியிடுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது: ‘நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது உறுதி. வெற்றியடைந்து மக்கள் பணி செய்ய காத்திருக்கிறேன்' என மிகுந்த நம்பிக்கையுடன் பேசினார்.