பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்ககோரி இன்று சிவகாசியில் முழு கடை அடைப்பு.!
pattasu factry sivakasi strick
நீதிமன்ற நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மூடப்பட்ட பட்டாசு ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி இன்று சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு தயாரிக்கும் தொழிலே மிகவும் பிரதான தொழிலாக உள்ளது. இத்தொழில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 8 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் சமீபத்தில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் இப்பகுதியில் இயங்கிவந்த 1070 பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
இதனால் இத்தொழிலை சார்ந்து வாழும் தொழிலாளர்கள் மிகவும் தங்கள் பொருளாதார நிலையில் நலிவடைந்து பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் உற்பத்தியாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் சங்கம், அச்சக உரிமையாளர்கள் சங்கம், சிறுவணிகர்கள் சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று சிவகாசி மற்றும் திருத்தங்கல், வெம்பக்கோட்டை, தாயில் பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.