விவசாய தோட்டத்தில் ஆங்காங்கே உயிரிழந்து கிடந்த 11 மயில்கள்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!
Peacock killed by poisioning by farmer
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னபுத்தூரில் விவசாய நிலங்களில் காய்கறிகள், பயிர்கள், தீவனங்கள் என பலவையும் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் அதிகப்படியாக சுற்றிவரும் மயில்கள் விவசாயபயிர்கள் அனைத்தையும் பெருமளவில் சேதபடுத்தியுள்ளது
இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். என்ன செய்வதென தெரியாமல் தவித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தோட்டத்தின் அருகே ஆங்காங்கே 11 மயில்கள் உயிரிழந்து கிடந்துள்ளது. இதனைக் கண்ட விவசாயிகள் சிலர் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து வனச்சரக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த வனச்சரக அதிகாரிகள் மயில்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் மயில்களின் மரணம் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, அந்த தோட்டத்திற்கு சொந்தக்காரரான அதே பகுதியை சேர்ந்த சேமலையப்பன் என்பவரே மயில்களுக்கு விஷம் வைத்து கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் விவசாய பயிர்களை அதிக அளவில் சேதப்படுத்தியதால் ஆத்திரத்திலேயே அவர் அவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து போலீசார் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சேமலையப்பனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.