தேர்தல் நேரத்தில் உடைக்கப்பட்ட பெரியார் சிலை! புதுக்கோட்டையில் பரபரப்பு!
periyar statue damaged in pudukottai
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு மருத்துவமனைக்கு அருகே பெரியார் சிலை உள்ளது. அந்த சிலையானது 1998-ம் ஆண்டு திராவிட கழக தலைவர் வீரமணி தலைமையில் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெரியார் சிலையின் தலைப்பகுதியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் மர்ம நபர்கள் .
இந்தநிலையில் நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பெரியார் சிலையின் தலை உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து திராவிடர் கட்சியினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து பெரியார் சிலையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அறந்தாங்கி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மேலும், அப்பகுதியின் திராவிடர் கழகத்தினர் அறந்தாங்கியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் பெரியார் சிலையை உடைத்தவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. கட்சியினர் உடைக்கப்பட்ட பெரியார் சிலையின் அருகே அமர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதனையடுத்து சேதம் அடைந்த சிலையை சீரமைத்து கொடுக்கப்படும் என்று தாசில்தார் எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.