மளிகை பொருட்கள் வாங்கச் செல்வது போல் கஞ்சா விற்பனை! போலீசாரின் அதிரடி வேட்டை! பெண்கள் உட்பட 4 பேர் சிக்கினர்!
police arrest kanja sale people
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், பொதுமக்களுக்கான தேவைகளுக்காக ஊரடங்கில் பல தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பைவிட தற்போது சாலையில் செல்லும் மக்களின் எண்ணிக்கையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் பரவை பகுதியில் மளிகை பொருட்கள் வாங்கச் செல்வது போல் நடித்து கட்டை பையில் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மதுரை சமயநல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்லூர் மணவாளநகர், அய்யாவு தெருவை சேர்ந்த காசி நாதன் (வயது 53), உசிலம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த முத்தையா (55) ஆகிய 2 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் 25 கிலோ கஞ்சா மற்றும் ரூ 1,600 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர். அதேபோல் மதுரை எம்.கல்லுப்பட்டி அடுத்த மல்லபுரம் ஜங்சன் பகுதியில் கஞ்சா விற்ற அருண்பாண்டி (21), கருப்பனாம்பட்டியைச் சேர்ந்த மணிப்பிள்ளை என்ற பெண் உட்பட 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.