ஹெல்மெட் அணியாமல் சென்ற இளம்பெண்ணை கம்பால் தடுத்த போலீஸ்! லாரி சக்கரத்தில் சிக்கி கால்கள் நசுங்கி அலறி துடித்த இளம்பெண்!
police blocking a young girl without wearing a helmet, her legs crushed in the truck
சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் யுவனேஷ். இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பிரியா என்ற பெண்ணிற்கும் சமீபத்தில் திருமணம் நடந்துள்ளது. இந்தநிலையில், நேற்று இரவு 7.30 மணி அளவில் பிரியா,தனது தாயின் பிறந்த நாளுக்காக பேக்கரியில் கேக் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்பகுதியில் காவல் உதவி மையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்த உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை பிடித்து வழக்குப்பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது காவலர் ஒருவர், ஹெல்மெட் அணியாமல் சாலையை கடந்து செல்ல முயன்ற பிரியாவின் இருசக்கர வாகனத்தை கம்பால் தடுக்க முயன்றார்.
இதனையடுத்து பிரியா, திடீரென பிரேக் பிடித்து அவரது வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது திருவள்ளூர் நோக்கி வந்த லாரி ஒன்று அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த பிரியா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவரது 2 கால்களும் நசுங்கியது.
வலியால் அலறி துடித்த பிரியாவை பொதுமக்கள் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்தநிலையில், பிரியா கீழே விழுந்ததற்கு போலீசாரே காரணம் என்று கூறி, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் அதே இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அங்கு நிறுத்தி இருந்த ஊர்க்காவல் படை வீரரின் மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கியதுடன் பெட்ரோல் ஊற்றியும் எரித்துள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடுதல் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பொதுமக்கள் களைந்து செல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.