தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்த காவல் ஆய்வாளர் மகேஸ்வரி!
Police Inspector Maheshwari who did his duty for the country despite the death of his father
74ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடும் வேளையில் பாளையங்கோட்டையில் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நேற்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த அணிவகுப்பை தலைமையேற்று நடத்தினார் ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி.
மகேஸ்வரி அவர்களின் தந்தை நாராயணசுவாமி ( வயது 83 ) நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு அவர் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை புறப்பட இருந்தார. ஆனால் திடீரென்று சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு நடத்துவதற்கு திடீர் என்று ஒருவரை மாற்றியமைக்க முடியாது என்ற சூழ்நிலையில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் அணிவகுப்பு மரியாதையை முடித்து விட்டு உடனடியாக தனது தந்தையின் துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றார்.
தனது தந்தை இறந்த போதிலும் நாட்டிற்கான தனது கடமையைச் செய்த ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரியின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது ட்விட்டர் பதிவில், "நெல்லை ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திருமதி.மகேஸ்வரி அவர்களது தந்தையின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தனது தந்தை இறந்த துக்கத்திலும் சுதந்திர தினவிழாவில், கடமையை நிறைவேற்ற அணிவகுப்பை முன்னின்று நடத்திய காவலர் மகேஸ்வரி அவர்களின் செயல் நெகிழ்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்