ஜாமீன் வேணுமா? 10 ஆயிரம் கொடு: பிரபல ரவுடியிடம் பேரம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்..!
ஜாமீன் வேணுமா? 10 ஆயிரம் கொடு: பிரபல ரவுடியிடம் பேரம் பேசிய போலீஸ் இன்ஸ்பெக்டர்..!
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகேயுள்ள சமுட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சீனுவாசன். இவரது மகன் ஸ்ரீகாந்த் 40). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் குள்ளஞ்சாவடி காவல் நிலைய ஆய்வாளர் ஷியாம் சுந்தர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் ஶ்ரீகாந்த்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தார்.
இதன் பின்னர், ஶ்ரீகாந்த்தை சிறையில் அடைக்காமல் சொந்த ஜாமீனில் ஷியாம் சுந்தர் விடுவித்துள்ளார். இதற்காக லஞ்சமாக ரூ. 10 ஆயிரம் தர வேண்டும் என்று ஸ்ரீகாந்த்திடம் கூறியுள்ளார். இதற்கிடையே காவல் நிலைய ஆய்வாளர் ஷியாம்சுந்தர், தன்னை காமீனில் விடுவிக்க லஞ்சம் கேட்டது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஸ்ரீகாந்த் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினரின் யோசனைப்படி, ஸ்ரீகாந்த் ரசாயன பவுடர் தடவிய ரூ. 5 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு நேற்று இரவு குள்ளஞ்சாவடி காவல் நிலையத்திற்கு சென்றார்.
அங்கு அவர் இல்லாததால் அவரது குடியிருப்புக்கு சென்ற ஶ்ரீகாந்த் ஆய்வாளர் ஷியாம் சுந்தரிடம் ரூ. 5 ஆயிரம் பணத்தை கொடுத்தார். இதனை அங்கு மறைந்திருந்து கண்காணித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். ரவுடியிடம் லஞ்சம் வாங்கிய காவல் நிலைய ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் கடலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.