பொள்ளாச்சி விவகாரத்தில் நீதிமன்றம் எடுத்த அதிரடி! பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.25 லட்சம்!!
pollachi issue
பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட காமக் கொடூர கும்பல், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி 200 பெண்களிடம் நட்பாக பேசி மடக்கி, அவர்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் அதில் இளம்பெண் ஒருவரை பாலியல் கொடுமை செய்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியானது. இதனை கண்ட அனைவரும் அந்த கொடூர மிருகங்களுக்கு உடனடியாக தணடனை கொடுக்கவேண்டும் என குரல் எழுப்பி வந்தனர்.
பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களையும், அடையாளங்களையும் முதல் தகவல் அறிக்கை மற்றும் நீதிமன்ற ஆவணங்கள் போன்றவற்றை ஊடகங்களில் வெளியிடக்கூடாது என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறினால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம் என நீதிமன்றம் அறிவித்திருந்தது.
ஆனால் பொள்ளாச்சியில் இளம்பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் புகார் அளித்த பெண்ணின் விவரங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தைரியமாக புகார் கொடுத்த பெண்ணின் பெயரை அரசாணையில் வெளியிட்டு பெண்ணின் ரகசியத்தை அரசு காக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். ரகசியத்தை காக்கவேண்டியவர்களே இவ்வாறு நடந்துகொண்டால் இதற்கு பின்னர் யார் புகார் கொடுக்க முன்வருவார்கள். இதனால் கோவைபோலீஸ் சூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
அதிகாரிகளின் இந்த செயல்பாட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும். எனவே அவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று மனநல ஆலோசனை வழங்க வேண்டும். மேலும், அவருக்கு இழப்பீடாக ரூ.25 லட்சத்தை வழங்க வேண்டும்.
மேலும், இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது என்பதால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.