சென்னைக்கு குடிநீர் பஞ்சம்?!,.. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்!,.பொதுபணித்துறை அதிகாரிகள் குழப்பம்..!
சென்னைக்கு குடிநீர் பஞ்சம்?!,.. வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்புவதில் சிக்கல்!,.பொதுபணித்துறை அதிகாரிகள் குழப்பம்..!
வீராணம் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததால் சென்னை மாநகராட்சிக்கு குடி நீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு மற்றும் காட்டுமன்னார்கோவில் ஊர்களுக்கு இடையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47. 50 அடி. இந்த ஏரியின் மூலம் 44, 856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகராட்சியின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாகவும் இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழையால் மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறைக்கப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12 ஆம் தேதி வாக்கில்தான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சற்று முன்னதாக கடந்த மாதம் 27 ஆம் தேதியே தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வந்து சேரும்.
ஆனால் மேட்டூர் அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறக்கப்பட்டும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான், இங்கிருந்து சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்ப முடியும். 38 அடிக்கு கீழ் ஏரியில் சேறும், சகதியுமாக இருக்கும் என்பதால் தண்ணீர் எடுக்க முடியாது.
இன்று காலை நிலவரப்படி 22 கனஅடி நீர் மட்டுமே சென்னை மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது நிலவரப்படி நீர்மட்டம் 39. 75 ஆக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து துளியளவும் இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்கு மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியம் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.