ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்! ரயில்வே துறை!
Railway department announcement
மார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரையுள்ள நாட்களில் ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ரயில், பேருந்து அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் ரயில்வே முன்பதிவு மையத்தில் எடுத்த பயணச்சீட்டுகளை மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால், டிக்கட் டெபாசிட் ரசீது படிவத்தை நிரப்பிக் கோட்டத் தலைமை வணிக மேலாளர், மண்டலத் தலைமை அதிகாரிக்கு ஜூன் 21ஆம் தேதி வரை கொடுத்து மீதித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்படும் அனைத்துப் பயணச்சீட்டுகளுக்கும் முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும். ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் மார்ச் 27 ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால் மீதித் தொகை, அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அதேபோல் மார்ச் 27ஆம் தேதிக்குப் பின் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு முழுத் தொகையும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.