நீண்ட நாட்களுக்கு பிறகு விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை!
rain in tamilnadu
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்துவருகிறது. வங்கக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு பரவலாக கன மழை முதல் அதிகன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. சென்னை மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், மேடவாக்கம், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் பலத்த காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு நள்ளிரவு முதல் விடியற்காலை வரை கனமழை கொட்டி தீர்த்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் திருவள்ளூரில் இருந்து நாகை வடமாவட்ட வரையுள்ள மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால் நாகை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, எண்ணூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் அபாய எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.