பலாத்கார வழக்கில் தலைமறைவான பாஸ்டர் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!
பலாத்கார வழக்கில் தலைமறைவான பாஸ்டர் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கைது..!
காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு ஒன்றரை வருடமாக தலைமறைவாக இருந்த பாதிரியார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகேயுள்ள வாயலூர் பகுதியை சேர்ந்தவர் பாதிரியார் சார்லஸ் (58). இவர் வாயலூரில் கிறிஸ்துவ பிராட் டிரஸ்ட் என்ற விடுதியை 2012 முதல் 2018 வரை நடத்தி வந்துள்ளார்.
இவர் நடத்திவரும் விடுதியில் தங்கி இருந்த சிறுமி ஒருவரிடம் பாதிரியார் சார்லஸ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக மாமல்லபுரம் மகளிர் காவல் நிலையத்தில் வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல்துறையினர், பாதிரியார் சார்லஸை தேடி வந்தனர். இதன் காரணமாக இவர் மீது ஒன்றரை வருடமாக போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக தலைமறைவாக இருந்து வந்த பாதிரியார் சார்லஸ் நேற்று கோயம்பேடு, ஜவகர்லால் நேரு சாலையில் உள்ள உணவகத்தில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். மாமல்லபுரம் மகளிர் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கோயம்பேடு காவல்தூறையினரின் உதவியுடன் கைது செய்து மாமல்லபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.