7 பேர் விடுதலை தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் - திருநாவுக்கரசர் சர்ச்சை கருத்து
releasing 7 people will make bad example
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென்று பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் பெருகி வருகின்றன. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக்கோரிய தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக கட்சி தலைவர்கள் பலர் ஆளுநருக்கு கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தார். ஆனால் இவர்களது விடுதலைக்கு பல்வேறு காரணங்கள் தடையாக இருந்தது.
இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161-ன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.
நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பரிந்துரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படும்.
அதன்பின்னர், ஆளுநர் இதுதொடர்பாக இறுதி முடிவு எடுக்கமுடியும் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் முடிவு குறித்து பலரும் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்வது, எதிர் காலத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் - தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர்
பழ.நெடுமாறன் அறிக்கையில், 'தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை கால தாமதம் செய்யாமல் உடனடியாக ஏற்று அவர்களை விடுதலை செய்ய முன் வருமாறு ஆளுநரை வேண்டிக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.