வங்கிக் கணக்கில் தவறுதலாக வந்த ரூ.40 லட்சம்! கணவன், மனைவி இருவரும் சேர்ந்து பார்த்த வேலை!
Rs.40 lakhs wrongly in the bank account
திருப்பூர் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் திருப்பூர் கார்ப்ரேஷன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இவரது வங்கிக் கணக்கில் ரூ.40 லட்சம் தவறுதலாக வரவு வைக்கப்பட்டது. பொதுப்பணித் துறைக்கு செல்ல வேண்டிய அந்த பணம் தவறுதலாக குணசேகரன் கணக்குக்கு சென்றது.
இதுகுறித்து தகவலறிந்த வங்கி அதிகாரிகள் குணசேகரனிடம் தொடர்பு கொண்டு ரூ.40 லட்சத்தை திருப்பி செலுத்துமாறு கேட்டுள்ளனர். ஆனாலும் அவர் அந்த பணத்தை திரும்பிக்கொடுக்காமல் அந்த பணத்தில் சொத்துகள் வாங்கியிருப்பது தெரியவந்தது. மேலும் பணத்தை கொடுக்காமல் வங்கியை ஏமாற்றி வந்துள்ளனர்.
இதனையடுத்து கார்ப்பரேசன் வங்கியின் உதவி பொது மேலாளர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு இதுகுறித்து குணசேகரன் மற்றும் அவருடைய மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த வழக்கு திருப்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி குணசேகரன் மற்றும் அவரது மனைவிக்கு தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.