அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து.. 2 கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர் என 3 பேர் பரிதாப பலி.!
அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து.. 2 கல்லூரி மாணவர்கள், ஓட்டுநர் என 3 பேர் பரிதாப பலி.!
பழனி முருகன் கோவிலுக்கு சென்று திரும்புகையில், பழனி நோக்கி சென்ற அரசு பேருந்து - கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை பகுதியை சார்ந்தவர்கள் பிரபு (வயது 23), செந்தில் (வயது 24) மற்றும் அறிவழகன் (வயது 25). இவர்கள் பழனி முருகன் கோவிலுக்கு செல்ல மாலை அணிவித்திருந்த நிலையில், இவர்களின் நண்பரான கந்தசாமி, ஜெகன், கோகுலகிருஷ்ணன் வடிவேல் ஆகியோருடன் பழனிக்கு சென்றுள்ளனர்.
பழனியில் சாமிதரிசனம் செய்துவிட்டு நேற்று இரவு நேரத்தில் சேலத்திற்கு காரில் வந்துகொண்டு இருந்தனர். காரை அறிவழகன் என்பவர் இயக்கிய நிலையில், இவர்களின் கார் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் காவல் நிலையம் அருகே வந்துள்ளது. அப்போது, ஈரோட்டில் இருந்து காங்கேயம் வழியாக பழனிக்கு சென்ற அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இந்த விபத்தில், காரின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கி இருக்கிறது. காரில் பயணித்த 7 பேரும் தங்களை காப்பாற்றக்கூறி அலறித்துடித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தகவல் அறிந்து விரைந்த காங்கேயம் காவல் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதில், பிரபு மற்றும் செந்தில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், பிற 5 பேரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவர்களில், அறிவழகன் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
வடிவேல் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்து குறித்து காங்கேயம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அரசு பேருந்தின் ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த பிரபு சேலம் அரசு கல்லூரியில் எம்.ஏ இரண்டாம் வருடம் பயின்று வருகிறார், செந்தில் எஞ்சினியரிங் கல்லூரியில் பயின்று வருகிறார். அறிவழகன் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இவர்களில் செந்திலுக்கு திருமணம் முடிந்து மோனிஷா என்ற மனைவியும், 6 மாத கைகுழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.