சுதந்திர தின நிகழ்ச்சிகளில் இவர்கள் எல்லாம் பங்கேற்க வேண்டாம்! தமிழக அரசு வேண்டுகோள்!
schools Students and senior citizens not participate in idependence day
நாட்டின் 74-வது சுதந்திர தினவிழா வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்து பள்ளிகளிலும் தனிநபர் இடைவெளியை பின்பற்றி எளிய முறையில் விழாவை கொண்டாடவும், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை அழைத்து சிறப்பிக்கவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுருந்தது.
74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் காலை 8.45 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றி வைக்க உள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சிகளின் போது வழக்கமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்வது வழக்கமாகும்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் பங்கேற்க வேண்டாம் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்குமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதேபோல் சுதந்திர போராட்ட தியாகிகள் வயது மூப்பின் காரணமாக் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர்கள் அவர்களுக்கு பொன்னாடை வழங்கி கவுரவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்களை வரவழைத்து சுதந்திர தினத்தன்று பரிசுகள் வழங்கி முதலமைச்சர் கவுரவிக்க உள்ளார்.