சாலையில் சூழ்ந்த புகை!. தடுமாறிய வாகன ஓட்டிகள்!.. துப்புறவு பணியாளர்கள் செய்த காரியத்தால் மக்கள் அவதி..!
சாலையில் சூழ்ந்த புகை!. தடுமாறிய வாகன ஓட்டிகள்!.. துப்புறவு பணியாளர்கள் செய்த காரியத்தால் மக்கள் அவதி..!
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில் 33 வார்டுகள் அமைந்துள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். விருத்தாசலம் நகர பகுதியில் தேங்கும் குப்பைகளை அப்புறப்படுத்திட, வடவாடி அருகே குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து, குப்பைகளை உரம் தயாரிப்பதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.
மக்கும் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு உரம் தயாரித்த பின்பு, அவை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சமீப காலமாக துப்புரவு பணியாளர்கள் தாங்கள் சேகரிக்கும் குப்பைகளை தரம் பிரிக்காமல், ஆங்காங்கே திறந்த வெளிகளில் கொட்டி வருவதாக கூறப்ப்டுகிறது. குறிப்பாக பாலக்கரை பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை, பாலத்தின் இறக்கத்தில் கொட்டி தீ வைத்து எரித்து விட்டு சென்று விடுகின்றனர்.
மேலும் விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில் சித்தலூர் சுடுகாடு அருகேயும், ஆலிச்சிக்குடி செல்லும் வழியில் புறவழிச்சாலையில் இறைச்சி கழிவுகள், சலூன் கடை கழிவுகள், உணவு விடுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், காலாவதியான உணவு பொருட்கள் ஆகியவற்றை குவியல் குவியலாக கொட்டி குவித்து தீவைத்து எரிக்கின்றனர்.
இதன் காரணமாக, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. சாலை முழுவதும் புகை சூழ்ந்திருப்பதால், வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே சுகாதார சீர்கேட்டினால் சிக்கி தவிக்கும் விருத்தாசலம் மக்கள், தற்போது தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகளால், பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.