இரயில் முன்பாய்ந்து மாணவி தற்கொலை விவகாரம்.. அக்கா - தங்கை புடவை சண்டை உயிரை பறித்த கொடூரம்.!
இரயில் முன்பாய்ந்து மாணவி தற்கொலை விவகாரம்.. அக்கா - தங்கை புடவை சண்டை உயிரை பறித்த கொடூரம்.!
கல்லூரிக்கு செல்லவிருந்த மாணவி இரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், அக்கா - தங்கையின் புடவைக்கான சண்டை இறுதியில் தங்கையின் உயிரை பறித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் திருக்கச்சூர் அம்பேத்கர் நகரை சார்ந்தவர் மாரிமுத்து. இவரின் மகள் நிரோஷா (வயது 20). நிரோஷா பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். இவர் தினமும் சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து தனது கல்லூரிக்கு மின்சார இரயிலில் சென்று வருவது வழக்கம்.
நேற்று, காலை நேரத்தில் கல்லூரி செல்வதற்கு புறப்பட்ட நிரோஷா, சிங்கப்பெருமாள் கோவில் இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு திடீரென சென்னை நோக்கி பயணம் செய்த மின்சார இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் நிரோஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், காவல் துறையினர் நடத்திய விசாரணையில், "மாணவி தனது கல்லூரியில் நடைபெற்ற இறுதி வருட விழாவில் நடனமாடியுள்ளார். விழாவில் கலந்துகொள்ள அக்கா பவித்ராவின் சேலையை பயன்படுத்திய நிலையில், இதனை ஏற்றுக்கொள்ளாத அக்கா எதற்காக எனது சேலையை உடுத்தினாய்? என தகராறு செய்துள்ளார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த நிரோஷா, இரவு மற்றும் காலை வேளையில் உணவு சாப்பிடாமல் இருந்துள்ளார். மகளை தந்தை சமாதானம் செய்து கல்லூரிக்கு செல்ல இரயில் நிலையம் வரை கொண்டு வந்து விட்டு சென்றுள்ளார். மன உளைச்சலில் இருந்து மீளாத மாணவியோ இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்" என்பது தெரியவந்துள்ளது.