பால் பவுடர் கூட குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.. என்ன செய்றது? - தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள் கண்ணீர் பேட்டி.!
பால் பவுடர் கூட குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை.. என்ன செய்றது? - தனுஷ்கோடி வந்த இலங்கை தமிழர்கள் கண்ணீர் பேட்டி.!
இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வருகை தரும் இலங்கை தமிழர்கள், கண்ணீருடன் கூறும் தகவல் பெரும் சோகத்தையே ஏற்படுத்துகிறது.
பொருளாதார பிரச்சனை காரணமாக இலங்கை அரசு திண்டாடிக்கொண்டு இருக்கும் நிலையில், அந்நாட்டு மக்கள் கடுமையான அளவு துன்பப்பட்டு வருகின்றனர். இதனால் இலங்கையில் உள்ள தமிழர்கள், கடல் வழியே ஆபத்தான பயணத்தை கையில் எடுத்து தமிழகம் வந்தவண்ணம் இருக்கின்றனர். இவர்கள் தமிழக அரசால் இலங்கை முகாம்களில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த சுசீகலா கண்ணீருடன் தெரிவித்த தகவலாவது, "என் கணவர் இரும்பு பட்டறையில் வேலைபார்த்து வந்தார். இலங்கையில் தற்போது பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது. குழந்தைகளின் பால் பவுடர், மருந்து பொருட்கள் கூட கிடைப்பது இல்லை. அதனால் படகுக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுத்த இங்கு பிழைக்க வந்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
வவுனியா மாவட்டத்தை சேர்ந்த 3 மாத கர்ப்பிணி மனைவியுடன் வருகை தந்த கோடீஸ்வரன் என்பவர் தெரிவிக்கையில், "நான் இலங்கையில் கூலி வேலை செய்கிறேன். விவசாய கூலியாக நான் வேலைபார்த்த நிலையில், பொருளாதார பிரச்சனை விவசாயித்திருக்கான விதை, பூச்சி மருந்து, இடுபொருள் போன்றவற்றையும் பாதித்துள்ளது. இதனால் விவசாயமும் கேள்விக்குறியாகிவிட்டது. எனது மனைவி 3 மாத கர்ப்பிணி. ஆகையால் அவருடன் தமிழகம் வந்துட்டேன்" என்று கூறினார்.
சுதா என்ற பெண்மணி பேசுகையில், "பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் துன்பப்படுகிறார்கள். அரிசி கிலோ ரூ.300, சீனி கிலோ ரூ.200, பிரட் ரூ.300 என விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறாக ஒவ்வொரு அத்தியாவசிய பொருளின் விலையும் உயர்ந்து, வேலைவாய்ப்பு முடங்கியுள்ளது. மின்சாரம் இல்லை. மருந்து பொருளும் கிடைப்பது இல்லை. அங்கு வாழ இயலாது. அதனால் இங்கு வந்துவிட்டோம்" என்று தெரிவித்தார்.