அதிக மார்க் எடுத்த என்னை ஏன் அழைக்கவில்லை?? விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் அழுது புலம்பி மாணவி வாதம்!!
அதிக மார்க் எடுத்த என்னை ஏன் அழைக்கவில்லை?? விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் அழுது புலம்பி மாணவி வாதம்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பையும் தாண்டி அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல நலத்திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை கௌரவப்படுத்தும் வகையில் பிரமாண்ட விழா ஒன்று நடைபெற்றது.
சென்னை, நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர் விஜய் தமிழ்நாட்டில் தொகுதி வாரியாக பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகை வழங்கி கௌரவித்தார். அப்பொழுது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக வழங்கினார்.
இந்நிலையில் அரங்கத்திற்கு வெளியே அதிக மதிப்பெண் எடுத்த தன்னை ஏன் விஜய் அழைக்கவில்லை என ஒரு மாணவி கண்ணீர் மல்க மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த மாணவி, தமிழ்நாட்டில் 600 முதல் மதிப்பெண். என்னுடைய மதிப்பெண் 597. எப்படிப் பார்த்தாலும் எனது தொகுதியில் 3வது இடத்திலாவது வந்துருப்பேன். ஆனால் விழாவிற்கு ஏன் என்னை அழைக்கவில்லை? எனது மார்க் எடுத்த என் ப்ரண்ட் உள்ளே இருக்கிறாள்.
இதுகுறித்து விஜய் மக்கள் இயக்க அலுவலகத்திற்கு போன் செய்தேன். மெயில் அனுப்பினேன்.ஆனால் அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதற்கு நிர்வாகிகள், ஒரு சில தவறுகளால் இது நேர்ந்திருக்கலாம். இன்று எதுவும் செய்ய முடியாது. 2நாட்கள் கழித்து நீங்கள் பனையூர் அலுவலகத்திற்கு சென்று விஜய்யை நேரில் சந்தித்து கூறுங்கள், உங்களுக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்துள்ளனர்.