37 ஆர்.சி புத்தகங்கள் திடீரென மாயம்.! சஸ்பெண்டு செய்யப்பட்ட கண்காணிப்பாளர் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து ரகளை.!
37 ஆர்.சி புத்தகங்கள் திடீரென மாயம்.! சஸ்பெண்டு செய்யப்பட்ட கண்காணிப்பாளர் கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து ரகளை.!
சென்னையை அடுத்த தாம்பரம், வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்த ஸ்மார்ட் கார்டு வடிவிலான, 37 ஆர்.சி புத்தகங்கள் திடீரென மாயமானது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து ஆணையர் நிர்மல் ராஜ் அலுவலகத்துக்கு நேரில் வந்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இது தொடர்பாக தாம்பரம் காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆர்.சி. புத்தகம் மாயமானது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களான வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் பாலாஜி காளத்தி, இளநிலை உதவியாளர்கள் சாந்தி, தாமோதரன் ஆகிய 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட கண்காணிப்பாளர் பாலாஜி நேற்று முன்தினம் மாலை தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் அங்கிருந்த கட்டையை எடுத்து கண்காணிப்பு கேமராக்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.