தஞ்சையில் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்; வட மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வலியுறுத்தல்...!
தஞ்சையில் தமிழக கட்டுமான தொழிலாளர்கள் போராட்டம்; வட மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வலியுறுத்தல்...!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் வட மாநில தொழிலாளர்களை வெளியேற்ற வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் நகராட்சியில் கட்டுமான தொழில், சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயத் தொழில் போன்ற பல்வேறு வேலைகளில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்வதால் தமிழர்கள் பலர் வேலை வாய்ப்பை இழந்து தவிப்பதாக கூறுகின்றனர்.
இதனால் சேர்மன்வாடி பகுதியில் கட்டுமானத் தொழிலாளர்கள் பெண்கள் உட்பட 300-க்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கட்டுமான தொழிலாளர்கள் தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டினம் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
பெண்கள் சாலை மறியலின் போது உடனடியாக வெளிமாநிலத்தவரை அப்புறப்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பி ஆவேசமாக காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.