தற்காலிக ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்பில்லையா - உயர்நீதிமன்றம்.!
tamilnadu - jacto jio - government stafs - strike
தற்காலிக ஆசிரியர்களை நியமித்தால் அவர்களும் போராடத்தில் ஈடுபட வாய்ப்பில்லையா என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 22ம் தேதி முதல் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்க கூடாது என்பது தொடர்பான பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் அரசு பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் வெள்ளிக்கிழமை மாலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளால் மாநிலம் முழுவதும் இதுவரை 450 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு அந்த இடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே பள்ளி இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளை மீண்டும் நடத்தும் விதமாக தற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க இந்தப் போராட்டம் தொடங்கும் தொடங்குவதற்கு முன்பே இது சம்பந்தமான வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் அதனை அவசர வழக்காக கருத்தில் கொண்டு இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசின் நடவடிக்கை குறித்து கருத்துக்களை தெரிவித்த நீதிமன்றம் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதில் நிறைய சிக்கல்கள் எழும். அதாவது தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அவர்களும் போராட்டத்தில் ஈடுபடக் கூடும். எனவே தமிழக அரசு இது சம்பந்தமாக தகுந்த உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.