திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து; தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Tamilnadu - thiruvarur thokuthi editharthal cancel
திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் வலுத்து வந்த நிலையில் தற்போது ரத்து செய்யப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், கஜா புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் ஒன்றாக திருவாரூர் தொகுதியும் உள்ளது. இந்நிலையில் பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு அரசு சார்பாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்த நிவாரணம் திருவாரூர் தொகுதிக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கடந்த 5 நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் இன்னும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால், இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், இடைத்தேர்தலின் போது முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் திருவாரூர் தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.