உலக அளவில் நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டு சாதனை படைத்த தமிழக மாணவி.! தமிழக முதல்வர் பாராட்டு.!
உலக அளவில் நடைபெற்ற போட்டியில் ஸ்வீடன் விருது பெறும் திருவண்ணாமலை மாணவிக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சுவீடன் நாட்டில் பிரபல நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள அடுத்த தலைமுறையினருக்கு காலநிலை மாற்றத்தை தெரியப்படுத்தவும், காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களை மாற்றியமைக்கவும் தேவையான ஆலோசனை, திட்டங்களை கட்டுரைகளாக அனுப்புமாறு அறிவிக்கப்பட்டது. இதில், 12 வயது முதல் 17 வயதுள்ளவர்கள், இந்தப் போட்டியில் கலந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதில் கலந்துகொண்ட தமிழகத்தின் திருவண்ணாமலையைச் சேர்ந்த மாணவி வினிஷா வெற்றிபெற்று முதல் பரிசை பெற்றுள்ளார். திருவண்ணாமலை எஸ்கேபி இண்டர்நேஷனல் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துவரும் வினிஷா உமாசங்கர் என்ற மாணவி காற்று மாசினை குறைக்க கரித்துண்டுக்கு பதிலாக சூரிய மின்சக்தியில் இயங்கும் சோலார் சலவைப் பெட்டியை கண்டுபிடித்துள்ளார்.
தமிழக மாணவி வினிஷா கண்டுபிடித்த சூரிய சக்தியில் இயங்கும் சலவைப் பெட்டி இந்தியாவின் காற்றின் தரம் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் பாராட்டியுள்ளனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ட்விட்டர் பக்கத்தில், "இளம்வயதிலேயே அறிவியல்மீது ஆர்வம்கொண்டு பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ள திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தற்போது சூரியசக்தி மூலம் இயங்கும் இஸ்திரி பெட்டியை கண்டுபிடித்து ஸ்வீடன் விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! என தெரிவித்துள்ளார்.