கேப்டன் விஜயகாந்தின் உடல்நிலை எவ்வாறு உள்ளது.? பிரேமலதாவிடம் நலம் விசாரித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
tamilnadu CM talk with premalatha
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அவருக்கு கொரோனா என்ற தகவலால் தேமுதிக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் மருத்துவ நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திற்கு கடந்த 22 ஆம் தேதி நடந்த மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தற்போது மருத்துவமனையில் அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் கூடிய விரைவில் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விஜயகாந்தின் உடல் நலம் குறித்து விஜயகாந்த் மனைவியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு அறிந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, இன்று காலை அவரது மனைவியும், அக்கட்சியின் பொருளாளருமான திருமதி.பிரேமலதா விஜயகாந்த் அவர்களிடம், திரு.விஜயகாந்த் அவர்களது உடல்நலன் குறித்து தொலைபேசி வாயிலாக விசாரித்தேன். அவர்கள் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.