பணி நியமனங்களில் உரிய விதிகளை பின்பற்ற வேண்டும்; டிஎன்பிஎஸ்சிக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.!
tamilnadu public service commition - high court
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) புதிய தேர்வு அறிவிப்பு வெளியிடும் முன் ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி, பணியிடங்களை நிரப்பிய பிறகு உருவாகும் காலி பணியிடங்களுக்கு அந்த தேர்வில் தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றவர்களை கொண்டு நியமிக்க வேண்டும்.
அதற்காக மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் டிஎன்பிஎஸ்சி மீது உயர்நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அதில்,"உதவியாளர், எழுத்தர் பணி தேர்வுக்கு 2014 பிப்ரவரி 6ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. 2014 ஜூன் 29 ல் எழுத்துத் தேர்வில் பங்கேற்றேன்.
தேர்வானோரின் தற்காலிக பட்டியல் வெளியானதில், எனது பெயர் இருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்ற நிலையில், காலிப்பணியிடம் இருந்தால் அழைப்பதாக டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்தது. ஆனால், இதுவரை பதில் இல்லை. ஆகவே, காலி இடத்தில், எனக்கும் தகுந்த பணியிடம் வழங்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இதை விசாரித்த நீதிபதி மகாதேவன் இன்று இந்த வழக்கில் முக்கிய உத்தரவை வெளியிட்டார்: அதன்படி, காலிப்பணியிடம் இருந்தால், மனுதாரரை நியமிக்க பரிசீலிக்க வேண்டும். அடுத்த அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி.,வெளியிடும் முன், ஏற்கனவே வெளியான அறிவிப்பின்படி தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை, காலிப் பணியிடங்களில் நிரப்ப வேண்டும். இதை சரியாக பின்பற்றாதது தெரியவந்தால், அதை உயர்நீதிமன்றம் கடுமையாக எடுத்துக் கொள்ளும் என எச்சரிக்கை விடுத்தார்.