பள்ளி பாடப்புத்தகத்தில் பிரபல தமிழ் நடிகரின் வாழ்க்கை வரலாறு; தமிழக அரசின் சீரிய முயற்சி.!
tamilnadu school book - 5th std - n.s kalaivanar
நடப்பு கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 'கலை உலகில் கலைவாணர்' என்ற தலைப்பில் பழம்பெரும் தமிழ் நடிகர் என்.எஸ் கிருஷ்ணனின் வாழ்க்கை வரலாறு இடம் பெற்றுள்ளது.
1908ம் ஆண்டு நவம்பர் 29 ஆம் நாள் நாகர்கோவில் அருகே ஒழுகினசேரியில் பிறந்தவர் கலைவாணர். தனது இளமைக் காலத்தில் குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக திரையரங்குகளில் குளிர்பானம் விற்று, நாடக துறையில் நுழைந்தார். பின்னர் சொந்தமாக நாடக கம்பெனியையும் நடத்தினார்.
அக்காலகட்டத்தில் தமிழகத்தில் திரைப்படத்துறை பிரபலமடைந்தது. அதிலும் நுழைந்த அவர் தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். திரைப்படத் துறையில் இவர் அறிமுகமான திரைப்படம் 1936களில் வெளிவந்த சதிலீலாவதி ஆகும்.
பெரும்பாலும் சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நகைச்சுவை மூலமாக கருத்துகளை பரப்பினார். ஏறத்தாழ 150 படங்களில் நடித்தார்.
இந்நிலையில், இவருடைய இளமைக்கால கஷ்டங்கள், கடின உழைப்பை தமிழக அரசு அங்கீகரித்துள்ளது. நாடகத்துறை, சினிமா துறையில் நுழைந்து தனது நகைச்சுவை மூலம் மக்களிடம் நற்கருத்துக்களை பரப்பிய இவருடைய பன்முகத் திறமையை ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் அவருடைய வாழ்க்கை வரலாறாக இடம்பெறச் செய்துள்ளது தமிழக அரசு.