தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத அரசு ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தி வைப்பு; பள்ளிக் கல்வித்துறை அதிரடி நடவடிக்கை.!
tamilnadu school education - tet exam - teachers no salary
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் அடிப்படையில் ஆசிரியர் பணி நியமனமானது வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த நடைமுறை கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி வழங்கப்படவில்லை என்றாலும் பாதிக்கு மேல் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த தேர்வுக்கு முன்பாக அதாவது 2010ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த அரசு ஆசிரியர்கள் அனைவரும் இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.
மேலும் 2019 மார்ச் 31ஆம் தேதிக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என்று 4 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கியது. இக்காலகட்டங்களில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பும் வெளியாகியது.
இந்நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம்
ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் இந்தச் செயலுக்கு ஆசிரியர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.