வடமாநில கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் சோகம்..! தென்காசி அருகே துயரம்.!
வடமாநில கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் சோகம்..! தென்காசி அருகே துயரம்.!
ஆன்லைன் ரம்மி கேமில் ரூ.70 ஆயிரம் பணத்தை இழந்த கர்ப்பிணி பெண், கணவனின் கண்டிப்பால் மனதுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர் வேலாயுதபுரம் கிராமத்தில், ஒடிசாவை சேர்ந்த அஜய்குமார் மண்டல் - மனைவி மந்தனா மஞ்சு தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் தனியார் மில்லில் ஊழியர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில், தற்போது மந்தனா கப்பிணியாக இருக்கும் நிலையில், அவருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் ரூ.70 ஆயிரத்தை இழந்துள்ளார். இந்த விஷயம் அஜய் குமாருக்கு தெரியவரவே, அவர் தன் மனைவியை கண்டித்து இருக்கிறார்.
இதனால் மனவேதனையடைந்த மந்தனா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். ஒருகட்டத்தில் மன விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர், சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு மந்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், கர்ப்பிணி மனைவி ஆன்லைன் ரம்மியில் பணத்தை பறிகொடுத்ததை கணவர் கண்டித்த காரணத்தால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.