சங்கரன்கோவில்: இளம்பெண்ணை காதலித்து கைவிட்ட காவலர்.. நியாயம் கேட்க சென்றால் அடி, உதை.!
சங்கரன்கோவில்: இளம்பெண்ணை காதலித்து கைவிட்ட காவலர்.. நியாயம் கேட்க சென்றால் அடி, உதை.!
21 வயது இளம்பெண்ணை காதலித்து கைவிட்ட காவலரிடம் பெண்ணின் தரப்பினர் நியாயம் கேட்க செல்கையில், அவர்கள் அடித்து அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. காவலர் மற்றும் அவரின் உறவினர்கள் அதிர்ச்சி செயல் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலை சேர்ந்த 21 வயது இளம்பெண், அப்பகுதியில் உள்ள தட்டச்சு பள்ளிக்கு சென்று வந்துள்ளார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த இளைஞரான வைரமுத்து என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வைரமுத்து குருவிகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களின் நட்பு ரீதியான பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், வைரமுத்து பெண்ணிடம் திருமண ஆசை காண்பித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் பெண் தன்னை திருமணம் செய்ய கூறி காவலரான வைரமுத்துவிடம் கூறவே, அவர் அதனை பொருட்படுத்தாமல் இருந்து வந்துள்ளார். மேலும், ஒரு சமயத்தில் திருமணம் செய்ய முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த பெண்மணி சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி 2 வாரத்திற்குள் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதற்கு வைரமுத்துவின் தரப்பும் சம்மதம் தெரிவிக்கவே, புகார் பேசி முடித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்கள் கடந்தும் திருமண ஏற்பாடுகள் நடக்காத நிலையில், வைரமுத்துவின் வீட்டிற்கு சென்ற பெண்மணி அவரது தாயாரிடம் முறையிட்டுள்ளார். அப்போது, இருதரப்பு வாக்குவாதம் ஏற்பட, வைரமுத்துவின் உறவினர்கள் 21 வயது இளம்பெண் மற்றும் அவரது தாயை அடித்து, அவதூறாக பேசி கொலைமிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வைரமுத்து, அவரின் உறவினர்கள் மாரிசாமி, கன்னியப்பன், செல்வி, சந்திரா, கன்னியம்மாள் ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.