பயங்கர வெடி சத்தம்.. புகை மண்டலமான படுக்கையறை.. புது மாப்பிள்ளைக்கு நடந்தது என்ன..?
பயங்கர வெடி சத்தம்.. புகை மண்டலமான படுக்கையறை.. புது மாப்பிள்ளைக்கு நடந்தது என்ன..?
சென்னையின் பெரம்பூர், திருவிக நகரில் உள்ள மணவாளன் தெருவில் குடியிருப்பவர் ஷியாம். இவர் அந்தப் பகுதியில் பால் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு, ஷியாமுக்கும், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனலட்சுமி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.
தற்போது ஆடி மாசம் என்பதால், கணவன் மனைவி பிரிந்திருக்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தினால் ஷியாமின் மனைவி தனலட்சுமி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே ஷியாம் அவரது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டின் கீழ் தளத்தில் இருந்த படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது அறையில் இருந்து வெடி சத்தம் கேட்டுள்ளது. வெடி சத்தம் கேட்டதால், மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஷியாமின் தந்தை, பதறிப் போய் கீழே வந்து பார்த்துள்ளார். அப்போது, வீடு முழுவதும் புகை மண்டலமாக இருந்துள்ளது.
மேலும் ஷியாம் தூங்கிக் கொண்டிருந்த அறை, உட்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததால் உடனடியாக, ஷியாமின் தந்தை மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள், அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, ஷியாம் அறையில் இருந்த ஏசி, வெடித்து தீப்பிடித்திருந்தது, அந்த தீயில் கருகி ஷியாம் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், ஷியாமின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்தும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். உயர் மின்னழுத்தம் காரணமாக இது நடந்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.