ஓடும் பேருந்தில் விபரீதம்.. 16 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாப பலி..!
ஓடும் பேருந்தில் விபரீதம்.. 16 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாப பலி..!
அரியத்திடலில் ஓடும் பேருந்தில் ஏற முயற்சித்த 11 ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அரியத்திடல் கிராமம், கற்பகம் நகரை சேர்ந்தவர் அமானுல்லா. இவர் கடந்த சில வருடத்திற்கு முன்னதாக உயிரிழந்துவிட்டார். இவரின் மகன் முகமது ஆதில் (வயது 16). சிறுவன் கும்பகோணம் அல் அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று காலை நேரத்தில் வழக்கம்போல பள்ளிக்கு புறப்பட்டு சென்ற முகமது ஆதில், நரசிம்மபுரத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற ஓடும் நகர பேருந்தில் ஏற முயற்சி செய்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து, பேருந்து நிறுத்தப்பட்ட நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் பக்கிரி சாமி துரிதமாக செயல்பட்டு பயணிகளை இறக்கிவிட்டு, பேருந்திலேயே முகமது ஆதிலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஆதில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
மருத்துவர்கள் சிறுவனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்க தொடங்கிய நிலையில், சிகிச்சை பலனின்றி முகமது ஆதில் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பட்டீஸ்வரம் காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகிறார்கள்.