மூடநம்பிக்கையின் உச்சம்.. கணவர் உடல்நலம்பெற 6 மாத கை குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி.. போலிச்சாமியார் முகமது சலீம்.!
மூடநம்பிக்கையின் உச்சம்.. கணவர் உடல்நலம்பெற 6 மாத கை குழந்தையை நரபலி கொடுத்த தம்பதி.. போலிச்சாமியார் முகமது சலீம் கைது.!
கணவரின் உடல்நலம் சீராக தனது அக்கா மகனின் 6 மாத பச்சிளம் குழந்தையை பெண் நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை சார்ந்த முஸ்லீம் மந்திரவாதியின் கூற்றால், பெண்மணி கணவருடன் சிறை சென்ற பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேராவூரணி, மல்லிபட்டினம் பகுதியை சார்ந்தவர் நசுருதீன் (வயது 32). இவரது மனைவி ஹாலிஹா (வயது 24). இவர்கள் இருவருக்கும் 5 வயதுடைய ராஜி முகமது என்ற ஆண் குழந்தையும், ஹாஜரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 6 மாத கைக்குழந்தை வீட்டின் பின்புறம் இறால் வைக்கும் ஐஸ் பெட்டி தண்ணீருக்குள் சந்தேகத்திற்கு இடமான வகையில் இறந்து கிடந்தது.
குழந்தையின் உடலை மீட்ட குடும்பத்தினர், மல்லிபட்டினம் ஜமாஅத்திற்கு உட்பட்ட முஸ்லீம் வாடிவாசலில் அடக்கம் செய்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் தங்கமுத்து, சேதுபாவாசமுத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், பட்டுக்கோட்டை தாசில்தார் கணேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் உட்பட அதிகாரிகள் தலைமையிலான குழு குழந்தையின் சடலத்தை தோண்டி எடுத்து, சம்பவ இடத்தில் வைத்தே பிரேத பரிசோதனை செய்தது.
பின்னர், காவல் துறையினர் குழந்தையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், நசுருதீனின் சித்தி ஷர்மிளா பேகம் (வயது 48), அவரது கணவர் அசாருதீன் (வயது 50) வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு, கடந்த 3 மாதத்திற்கு முன்னதாக ஊருக்கு வந்துள்ளனர். இதில், அசாருதீனுக்கு அவ்வப்போது உடல்நல பாதிப்பு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாஜிபட்டினம் பகுதியில் குறிசொல்லும் கேரள மந்திரவாதியான முகமது சலீம் (வயது 48) என்ற நபரிடம், ஷர்மிளா பேசுகையில் கணவரின் உடல்நலம் மீண்டு வர உயிர்பலி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஷர்மிளாவும் வீட்டினை சுற்றி 20 க்கும் மேற்பட்ட கோழி மற்றும் ஆடுகளை பலிகொடுத்த போதும், கணவரின் உடல்நலம் மீண்டு வரவில்லை.
இதனால் மீண்டும் மந்திரவாதி முகமது சலீமிடம் சென்று கேட்கையில், குழந்தையை பலிகொடுத்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என தெரிவித்து இருக்கிறார். இதனையடுத்து, வீட்டிற்கு வந்த ஷர்மிளா பேகம், தனது அக்கா மகன் நசுருதீனின் 6 மாத கைக்குழந்தை ஹாஜராவை பலிகொடுக்க முடிவெடுத்துள்ளார்.
கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவில் வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல் பச்சிளம் குழந்தையை மந்திரவாதியிடம் கொண்டு சென்று நரபலி கொடுத்துவிட்டு, குழந்தையின் உடலை மீண்டும் வீட்டிற்கு கொண்டு வந்து இறால் வைக்கும் பிளாஸ்டிக் ஐஸ் பெட்டியில் தண்ணீர் ஊற்றி அமுக்கி வைத்து சென்றார்" என்பதும் தெரியவந்துள்ளது. விசாரணையின் முடிவில், ஷர்மிளா பேகம், அவரின் கணவர் அசாருதீன், கேரள போலி மந்திரவாதி முகமது சலீம் ஆகிய 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.