நகைகளை தொலைத்துவிட்டு பரிதவித்த மணப்பெண்ணின் பெற்றோர்!,..நேரில் வந்து கண்ணீரை துடைத்த ஆட்டோ டிரைவர்.! குவியும் பாராட்டு..!
நகைகளை தொலைத்துவிட்டு பரிதவித்த மணப்பெண்ணின் பெற்றோர்!,..நேரில் வந்து கண்ணீரை துடைத்த ஆட்டோ டிரைவர்.! குவியும் பாராட்டு..!
ஆட்டோவில் தவறவிட்ட நகைகளை உரியவரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
விருதுநகர் பெரிய வள்ளிக்குளத்தைச் சேர்ந்தவர்கள் கருப்பசாமி – முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களது மகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று விருதுநகர் ராமர் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் வரவேற்பு மற்றும் மற்ற சடங்குகள் விருதுநகர் கந்தசாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மணப்பெண்ணின் பெற்றோர் திருமணம் நடைபெற்ற ராமர் கோயிலில் இருந்து திருமண மண்டபத்திற்கு செல்ல ஆட்டோவில் பயணித்துள்ளனர். ஆட்டோ ஓட்டுநர் ராமர், தமபதியினர் இருவரையும் திருமண மண்டபத்தில் இறக்கி விட்டு ஆர்.எஸ்.ஆர்.நகரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதற்கிடையே, நகை வைத்திருந்த பையை தவற விட்டதை அறிந்த பெண்ணின் பெற்றோர் விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமண மண்டபத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திருமண மண்டபத்திற்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ராமர் அவர்களிடம் நகை இருந்த பேக்கை வழங்கினார். அங்கிருந்த, காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் நகைகள் சரிபார்க்கப்பட்டு பெண்ணின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் கூறிய போது, வீட்டிற்கு சென்ற பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்து மற்றொரு சவாரிக்காக வீட்டில் இருந்து கிளம்பினேன். அப்போது ஆட்டோவின் பின் சீட்டில் பேக் ஒன்று இருந்ததை கவனித்தேன். பின்னர் பேக்கை திறந்து பார்த்தப்போது நகைகள் இருப்பதைக் கண்டதும் காலை திருமண மண்டபத்தில் சவாரி இறக்கி விட்டது நினைவுக்கு வந்தது. அதனால் பேக்கை எடுத்துக்கொண்டு உடனடியாக மண்டபத்திற்கு வந்தேன் என்று கூறினார்.
இதையறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், ஆட்டோ ஓட்டுனர் ராமரின் நேர்மையை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.