ஸ்கூல் பஸ் மீது பலமாக மோதிய கார்: கிளீனர் பரிதாப பலி..!
ஸ்கூல் பஸ் மீது பலமாக மோதிய கார்: கிளீனர் பரிதாப பலி..!
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பகுதியில் உள்ள காலனி தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் பச்சமுத்து (50). இவர் திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கிளீனராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், பச்சமுத்து நேற்று காலை பெரம்பலூரை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் உள்ள அரசுப்பள்ளி அருகே தான் வேலை செய்யும் பள்ளியின் பேருந்தில் மாணவர்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே அதிவேகத்தில் வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி, பள்ளி பேருந்தின் முன்புறத்தில் மோதியது.
இந்த கோர விபத்தில் பச்சமுத்து படுகாயமடைந்தார். அவரை பேருந்தின் ஓட்டுனரான தாமரைக்கண்ணன் (37) என்பவர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்தில் காரை ஓட்டிவந்த விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (57) என்பவரும் பலத்த காயமடைந்தார். இவர் பெரம்பலூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் தாமரைக்கண்ணன் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்த பெரம்பலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.