அப்பளம் போல் நொறுங்கிய கார்..அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மருத்துவக்கல்லூரி மாணவர்..!
அப்பளம் போல் நொறுங்கிய கார்!! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய மருத்துவக்கல்லூரி மாணவர்..!
நாமக்கல் மாவட்டம் பட்லூர் சாலப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் யுவராஜ் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.எஸ் இரண்டாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் யுவராஜ் தன் சொந்த வேலையாக திருச்சியிலிருந்து பெரம்பலூருக்கு தனியாக காரில் சென்றுள்ளார். அவர் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கூத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற சிமெண்ட் லாரியை வேகமாக முந்திச் செல்ல முயற்சித்துள்ளார். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் முன்னால் சென்ற சிமெண்ட் லாரி மீது மோதியதோடு மட்டுமல்லாமல் அருகில் சென்ற மற்றொரு லாரியின் மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. ஆனால் இதில் அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிச் சென்ற யுவராஜ் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இதனை தொடர்ந்து சம்பவம் குறித்து தகவலறிந்த கொள்ளிடம் காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும் யுவராஜை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.