இளம்பெண் கத்தியால் குத்தி கொலை; கொழுந்தனின் வெறிச்செயலால் பரபரப்பு..!
இளம்பெண் கத்தியால் குத்தி கொலை; கொழுந்தனின் வெறிச்செயலால் பரபரப்பு..!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள ராமநத்தம் பகுதிக்கு அருகேயுள்ள கல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி பட்டத்தாள். இவர்களுக்கு முருகேசன், ரவி, வெங்கடேசன் மற்றும் காசிநாதன் ஆகிய 4 மகன்களும், மகாலட்சுமி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது.
இவர்களில் வெங்கடேசன் (38). செஞ்சியை சேர்ந்த பிரேமலதா (25) என்ற இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்த நிலையில், வெங்கடேசன் தனது சொந்த வேலை காரணமாக சில நாட்களுக்கு முன்பு சென்னை சென்றுள்ளார். இதனால் பிரேமலதா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
இந்த நிலையில், வெங்கடேசன் தம்பியான காசிநாதன் வீட்டிற்கு வந்துள்ளார். திடீரென அவர் பிரேமலதாவை கத்தியால் குத்தியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில், படுகாயமடைந்த பிரேமலதா, கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கத்திக்குத்து காயங்களுடன் பிரேமலதா உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேமலதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநத்தம் காவல்துறையினர், பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ராமநத்தம் காவல் நிலையத்தில் காசிநாதன் சரண் அடைந்தார். சொத்து தகராறு காரணமாக பிரேமலதாவை காசிநாதன் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் காசிநாதனிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் ராமநத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.