அதிரடி ஆக்சன் காட்டிய ராசிபுரம் மக்கள்... சட்டவிரோதமாக கனிம வளம் கடத்திய வாகனங்களை மடக்கி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!
அதிரடி ஆக்சன் காட்டிய ராசிபுரம் மக்கள்... சட்டவிரோதமாக கனிம வளம் கடத்திய வாகனங்களை மடக்கி பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த பொதுமக்கள்..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண், கிரானைட் மற்றும் கனிம வளங்கள் ஆகியவற்றை கடத்திச் சென்ற வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கோம்பைகாட்டில் உள்ள மலை குன்றுகளை சில சமூக விரோதிகள் வெடிவைத்து தகர்த்து வருவதாகவும் அங்கு விதிகளை மீறி கிராவல் மற்றும் கனிம வளங்களை கடத்தி வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் உயர் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று கடத்தலில் ஈடுபட்ட லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை சிறைப்பிடித்து வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் இந்த கனிம வளங்கள் கடத்தல் தொடர்பாக மாவட்ட ஆட்ச்சியரிடம் தகவல் தெரிவித்து கடத்தல்காரர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.