இடிபாடுகளில் சிக்கி தவித்த லாரி டிரைவர்: 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்ட போலீசார்..!
இடிபாடுகளில் சிக்கி தவித்த லாரி டிரைவர்: 1 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்ட போலீசார்..!
திருவள்ளூர் மாவட்டம், முல்லைவாயல் பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியின் மீது டிப்பர் லாரி மோதியதில் ஓட்டுனர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கினார். அவரை காவல்துறையினர் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மீட்டுள்ளனர்.
வண்டலூர்-மீஞ்சூர் சாலையில் எண்ணூர் துறைமுகத்திற்கு டேங்கர் லாரி ஒன்றும் டிப்பர் லாரி ஒன்றும் சென்று கொண்டிருந்தன. மீஞ்சூர் அருகே பெரிய முல்லைவாயல் பகுதியை கடந்த போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது, டிப்பர் லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் டிப்பர் லாரியின் முன்புறம் நசுங்கியதில் அதன் ஓட்டுனர் லாரியின் உள்ளே சிக்கிக் கொண்டார். இந்த விபத்து குறித்து அந்த பகுதியில் இருந்தவர்கள் சோழவரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் மற்றும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் வாகனத்தின் மூலம் இரண்டு லாரிகளையும் தனித்தனியாக பிரித்து எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, 1மணி நேரம் போராடி விபத்தில் சிக்கிய இரண்டு லாரிகளையும் தனித்தனியாக பிரித்து எடுத்த காவல்துறையினர் லாரியின் கேபினுக்குள் சிக்கி தவித்துக் கொண்டிருந்த ஓட்டுனரை பத்திரமாக மீட்டனர். காலில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்த லாரி ஓட்டுனரை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சோழவரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.