"என் மகன நல்லாதானே வளர்த்தேன்..." மகன் சிறை சென்றதால் தந்தை எடுத்த விபரீத முடிவு.!
என் மகன நல்லாதானே வளர்த்தேன்... மகன் சிறை சென்றதால் தந்தை எடுத்த விபரீத முடிவு.!
தேனி அருகே திருட்டு வழக்கில் மகன் கைது செய்யப்பட்டதால் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி வயது 45. இவரது மனைவி வைரமணி இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கின்றனர். ஆசைத்தம்பி சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அந்த பகுதியில் ஒரு திருட்டு சம்பவம் நடைபெற்றது. அது தொடர்பாக ஆசை தம்பியின் மகன் கௌதமும் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கௌதம் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் மிகுந்த மனவேதனையில் இருந்திருக்கிறார் ஆசை தம்பி. நான் நன்றாக தானே என் மகனை வளர்த்தேன் அவன் ஏன் இப்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டான் எனக் கூறி புலம்பி இருக்கிறார்.
கடந்த மூன்று நாட்களாக வீட்டிற்கு வராத நிலையில் அன்னஞ்சி விலக்குப் பகுதியில் ஆட்டோவுக்குள் விஷம் அருந்திய நிலையில் அவர் இறந்து கிடந்தார். அல்லிநகரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு நடத்திய விசாரணையில் தனது மகன் திருட்டு சம்பவத்தில் சிறை சென்றதால் அவமானப்பட்டு ஆசை தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது.