இடைஞ்சல் கொடுத்த குடிப்பிரியர்கள்: கொந்தளித்து போராட்டத்தில் குதித்த மக்கள்..!
இடைஞ்சல் கொடுத்த குடிப்பிரியர்கள்: கொந்தளித்து போராட்டத்தில் குதித்த மக்கள்..!
கோயம்புத்தூர் மாவட்டம், தடாகம் அருகேயுள்ள கே.என்.ஜி.புதூர் பகுதியில் உள்ளது அந்த தனியார் திருமண மண்டபம். இதனை சமீபத்தில் டாஸ்மாக் மதுபானக் கூடமாக மாற்றியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளின் மத்தியில் இந்த மதுபானக்கூடம் செயல்பட்டு வருவதாலும், இதன் அருகில் பள்ளி ஒன்று இருப்பதாலும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், இதனால் டாஸ்மாக் மதுபானக்கூடத்தை மூட வேண்டும் என்றும் அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
மேலும் அந்த பள்ளி நீண்டகாலமாக அங்கு செயல்பட்டு வரும் நிலையில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானக்கூடத்திற்கு வரும் மதுப்பிரியர்களால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து உள்ளதாகவும், இரவு நேரங்களில் பெண்கள் மற்றும் மாணவர்கள் அந்த வழியாக செல்ல அச்சமடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று டாஸ்மாக் மதுபானக்கூடத்தை மூட வலியுறுத்தி, அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான ஆண்கள், பெண்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தடாகம் காவல் நிலைய அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மதுபானக்கூடத்தை வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.