பேரக் குழந்தையை வீசி எறிந்த பெண்!.. குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர்!.. பத்திரமாக மீட்டு ஒப்படைத்த போலீசார்..!
பேரக் குழந்தையை வீசி எறிந்த பெண்!.. குழந்தையை காணாமல் தவித்த பெற்றோர்!.. பத்திரமாக மீட்டு ஒப்படைத்த போலீசார்..!
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அஜீத் குமார் (24). இவர் டீ மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மேரி (20). இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அஜீத்தின் தாயார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், தீபாவளிக்கு துணி எடுப்பதற்காக மனைவி, குழந்தை மற்றும் தனது தாயுடன் அஜீத் குமார் ஈரோடு புறப்பட்டு சென்றுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தாயையும் குழந்தையையும் பின் சீட்டில் அமர வைத்த அஜீத்குமார் தனது மனைவியுடன் பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்துள்ளார்.
ஈரோடு பேருந்து நிலையத்தை அடைந்த போது தனது தயாரையும், குழந்தையையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனை தொடர்ந்து தம்பதியினர் இருவரும் ஈரோடு பேருந்து நிலையம் முழுவதும், தாயையும், குழந்தையையும் தேடி அலைந்தனர்.
இதற்கிடையே, திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையத்தில் நகர பேருந்துக்கு அடியில், பெண் ஒருவர் குழந்தையை வீசியதை சமூக ஆர்வலர் மோகன் என்பவர் பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த குழந்தையை மீட்ட அவர் பெண்ணிடம் விசாரித்ததில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குழந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் இருவரையும் தனது செல்போன் கடையில் வைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலறிந்து செல்போன் கடைக்கு வந்த காவல்துறையினர், திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் குழந்தையின் பெற்றோரை தேடி வந்த நிலையில், ஈரோடு பேருந்து நிலையத்தில் குழந்தையை காணவில்லை என பெற்றோர்கள் தேடி வருவதாக ஈரோட்டில் இருந்து வந்த பயணிகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஈரோடு சென்ற திருச்செங்கோடு காவல்துறையினர், குழந்தையின் பெற்றோரை கண்டறிந்து குழந்தையை அஜித் மேரி தம்பதியிநரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.